நதி

கதை கவிதை கட்டுரை

Thursday, May 20, 2004

போருக்குப் பின் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரம் சீராக இருப்பதற்கு நாடுகளுக்கிடையிலான சமாதானங்கள் முக்கியமானது. முதலாவது உலகப்போர் 1914இல் தொடங்கியதில் இருந்து உலகநாடுகளுக்கிடையிலான சமாதானங்கள் மிகவும் சீர்குலைந்து காணப்படுகின்றது.

இதனால் ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டின் தேவைகளுக்கு தாங்களே உற்பத்திகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மூலப்பொருட்கள் உள்ள நாடுகள் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கத் தொடங்கின. கைத்தொழில் நாடுகள் தங்களது விவசாயத்தை பலப்படுத்தத் தொடங்கின.

இந்தத் திடீர் நிலமைகளின் மாற்றங்களினால் வறிய நாடுகளிடம் பெரும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கியது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வறிய நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கூடுதலான வட்டிக்கு பணங்களைப் பெற்று தற்காலிகமாக நிலைமைகளைச் சமாளிக்க ஆரம்பித்தன. ஆனால் கழுத்தில் போடப் பட்ட சுருக்குக் கயிறு போல் கடன் தொல்லைகள் வறிய நாடுகளை இறுக்கத் தொடங்கின. வட்டிகள் கூடக் கட்டமுடியாமல் பெரிதும் சிரமப்பட்டன.

உலகப்போர் முடிவுக்கு வந்தபின்னரும் உலகப்பொருளாதாரம் பெரும் சிக்கலான நிலையிலேயே இருந்தது. இன்னும் மோசமான நிலைக்கு பொருளாதார நிலை சரியத்தொடங்கியது. இதற்கு முக்கிய இருகாரணிகள், எண்ணிக்கையிலடங்காத அகதிகளின் தொகையும், பல கோடி மக்கள் வேலையின்றி இருந்தமையுமே ஆகும். விவசாயிகள் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் திண்டாடினார்கள். தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யமுடியாமல் தேங்கியிருந்தன. இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பலர் வேலை இழக்க வேண்டிய நிலைமை உருவானது. வேலை இழந்நோருக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்குக் கூட அரசாங்கத்தின் உதவிகள் தேவைப்பட்டன. இதனால் மீண்டும் கடன்கள் வாங்கப்பட்டு அப்போதைய நிலமைகள் சமாளிக்கப்பட்டன. ஆரம்பத்தில், பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்தன. இதனால் மேற்கொண்டு கடன்களைப் பெற்றுக்கொள்ள நாடுகள் தயக்கம் காட்டவில்லை. நாடுகளுக்குக் கடன்களைக் கொடுக்கும் இடத்தில் அமெரிக்கா முதல் நிலையில் இருந்தது.

யுத்தம் நடக்கும்போது கொடுத்த கடன்களாலும், ஆயுத உற்பத்தியாலும்
அமெரிக்கா ஒரு பணக்கார நாடாக உருவாகியிருந்தது. தொழிற்சாலைகளின் உற்பத்திகள் திறமையாகச் சந்தைப்படுத்தப்படும் என்று அமெரிக்கத் தொழிற்சாலைகள் நம்பியிருந்தன. அதனால் அமெரிக்கத் தொழிற்சாலைகள் புதுவிதமான முறைகளில் பெறுமதியான பொருட்களை உருவாக்கி ஓரளவு குறைந்ந விலையில் விற்பனை செய்யத் தொடங்கின.
அவர்கள் உருவாக்கிய பொருட்கள் தரமாக இருந்த காரணத்தால், நீண்டநாட்கள் பாவிக்கக் கூடியனவாக இருந்தன. இதன் காரணமாக மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களது பொருட்களை வாங்க வேண்டிய தேவைகள் இல்லாது போயின. இதனால் தொழிற்சாலைகளின் உற்பத்திகள் தேங்கத் தொடங்கின.

அமெரிக்கத் தொழிற்சாலைகளின் பொருட்களின் தரங்கள், விற்பனைகளை அவதானித்த மக்கள் பங்குச் சந்தைகளில் பெருமளவு பங்குகளை வாங்கியிருந்தனர். இந்த மக்களை ஊக்குவிக்கும் விதமாக வங்கிகளும் குறைந்த வட்டிக்குப் பணம் கொடுக்க முன் வந்தன. மக்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பங்குகளை வாங்கிக் குவித்தனர்.

1929 கோடைக்காலத்திலும் மீண்டும் பெரியதோர் இடி அமெரிக்காவின் பொருளாதாரத்தில் விழுந்தது. பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமல் தொழிற்சாலைகள் திண்டாடின. தொழிலாலர்களுக்கு ஊதியங்களை கொடுக்க முடியாத நிலையில் பலரை வேலையிலிருந்து தொழிற் சாலைகள் நீக்கிவிட்டன. இந்த நிலமையில் மாற்றம் வரும் என அமெரிக்க மக்கள் நம்பியிருந்தனர். இதை உறுதிசெய்யும் வண்ணம் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கூவர்(Hoovar) இன் சொற்பொழிவுகளும் அமைந்திருந்தன.

இருந்தும் 1929 ஒக்ரோபர் மாதத்தில் பங்குச்சந்தையின் பெறுமதிகள் குறைய ஆரம்பித்தன. பங்குகளின் பெறுமதி முற்றாக இல்லாமல் போவதற்கு முன்னர் தங்களது பங்குகளை மக்கள் விற்கத் தொடங்கினார்கள். தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடத் தொடங்கின. 1929ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி வெள்ளிக்கிழமை நிலமை உச்சக் கட்டத்தை அடைந்தது. பின்நாளில் இந் நாள் கறுப்பு வெள்ளிக்கிழமை (Black Friday) என்று பெயர் சூட்டப்பட்டது.

அமெரிக்கா ஏற்றுமதியின் சுங்கவரியைக் கூட்டி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சி செய்தது. இதனால் சர்வதேசச் சந்தையும் பொருளாதார ஆபத்துக்குள்ளானது. தான் கொடுத்த கடன்களைத் திருப்பித்தருமாறு மற்றைய நாடுகளை அமெரிக்கா கேட்கத் தொடங்கியது.

இந்த நேரத்தில் ஜேர்மனியின் பொருளாதாரமும் அதள பாதாளத்திலேயே இருந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்து, ஊதியங்கள் குறைந்து, கோடிக்ணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வீதிக்கு வரவேண்டிய நிலமை ஏற்பட்டது. பணம் போதாமல் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்யமுடியாமல் திண்டாடினார்கள்.

அமெரிக்கா கொடுத்த கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்யெ ஒரு கட்டாயமான நிலையில் வங்கிகள் இருந்தன. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டதனால், தொழிற்சாலைகளுக்கு கடனாகக் கொடுத்த பணத்தை மீளப்பெற முடியாத நிலமைகளும் வங்கிகளுக்குச் சேர்ந்து கொண்டன.

இந்த நிலைகளைப் புரிந்துகொண்ட மக்கள் தாங்கள் வங்கியில் வைப்பீடு செய்த பணங்களைப் பெறுவதற்கு வங்கிகள் தோறும் வெள்ளம் போல் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மக்கள் வைப்பீடு செய்த பணத்தைத் திருப்பித் தரமுடியாத நிலையில் ஜேர்மனியின் முக்கிய பெரிய வங்கிகளில் ஒன்று மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டது. வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக அப்போதைய ஜேர்மன் அரசு வங்கி லீவு நாட்களை அறிவித்தது.

இதேவேளையில் முதலாளி அமைப்புக்களுக்கும், தொழிலாளர் அமைப்புக்களுக்கும் இடையிலேயே பூசல்கள் ஆரம்பித்தன. அரசாங்கத்தின் ஆதரவு முதலாளி வர்க்கத்தின் பக்கமே இருந்ததால் தொழிலாளி வர்க்கம் நசுக் கப்படத் தொடங்கியது. குறைவான ஊதியத்தில வாழ்க்கைச் செலவுக்கே தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதனால் அப்போதைய குடியரசிடம் மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். இதுவே NSDSP என்ற கிட்லரின் அமைப்பு முன்னுக்கு வர முக்கிய காரணமாயிற்று.

திலீபன்.செல்வகுமாரன் - யேர்மனி
பிரசுரம் - இளங்காற்று மார்ச்-1997
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.